சி.ஐ.ஏ.யால் இயக்கப்படும் உளவு விமானங்கள் பற்றி இப்போதெல்லாம் அடிக்கடி செய்திகளில் பார்த்திருப்பீர்கள். இப்போது குறிப்பிடப்படும் உளவு விமானங்கள் அனைத்துமே, ஆளில்லாத (விமானி இல்லாமல் பறக்கும்) சிறிய விமானங்கள். சரி. சி.ஐ.ஏ., உளவு விமானங்கள் மூலம் உளவு பார்ப்பதைத் தொடங்கியது எப்போது என்று தெரியுமா? அவர்கள் பயன்படுத்திய முதலாவது உளவு விமானம் பற்றித் தெரியுமா?
சி.ஐ.ஏ. பயன்படுத்திய முதலாவது உளவு விமானத்தின் பெயர் யூ-2.
சி.ஐ.ஏ.யின் தலைவராக அலன் டுல்லஸ் இருந்த காலத்தில்தான் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அலன், 1953-1961 காலப்பகுதியில் சி.ஐ.ஏ.யின் தலைவராக இருந்தவர். அந்த நாட்களில் அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரி, சோவியத் ரஷ்யா.
அப்போதெல்லாம், ரஷ்யாவை இரும்புத் திரைக்குள் இருக்கும் நாடு என்பார்கள். காரணம், யாரும் உள்ளே நுழைந்துவிட முடியாது. இதனால், சி.ஐ.ஏ. ரஷ்யாவுக்குள் ஊடுருவி உளவு பார்ப்பது சுலபமான காரியமாக இருக்கவில்லை. எனவே, ரஷ்யாவுக்குள் என்ன நடக்கின்றது என்பதை உளவு பார்க்க, விசேடமாக உளவு விமானம் ஒன்றைத் தயாரிக்கும் முடிவை எடுத்தது சி.ஐ.ஏ.
இந்த ‘உளவு விமான’ கான்செப்ட் அப்போது சி.ஐ.ஏ.க்கு புதியது. இதில் யாருக்கும் அனுபவம் கிடையாது. அப்படியொரு விமானமும் அதுவரை தயாரிக்கப்பட்டதில்லை. இதனால், இந்த ஆபரேஷனை யாரிடம் ஒப்படைப்பது என்ற குழப்பம் அலன் டுலஸ்ஸுக்கு ஏற்பட்டது.
பலரது பெயர்களைப் பரிசீலித்த அவர், இறுதியில் தேர்ந்தெடுத்த நபர், ரிச்சர்ட் பிஸ்ஸல்.
இது ஒரு ஆச்சரியமான தேர்வு. காரணம், அவருக்கு விமானங்கள் பற்றி இருந்த அறிவு, பூச்சியம்.
‘விமானம் என்றால் வானில் பறக்கும்’ என்பதைத்தவிர வேறு எதுவுமே தெரியாமல் இருந்த ஒருவரிடம், சி.ஐ.ஏ.யின் முதலாவது ரகசிய உளவு விமானத்தை வடிவமைக்கும் ஆபரேஷன் கொடுக்கப்பட்டபோது, அவர் அதில் வெற்றியடைய முடியாது என்றே சி.ஐ.ஏ.யில் பலரும் நினைத்திருந்தார்கள்.
இந்தத் திட்டத்துக்காக 21 மில்லியன் டாலர் பணமும் ஒதுக்கப்பட்டு, அதைச் செலவு செய்யும் முழு அதிகாரமும் ரிச்சர்ட் பிஸ்ஸலிடம் கொடுத்திருந்தார்கள். அந்தளவுக்கு அவரில் நம்பிக்கை வைத்திருந்தார் அலன் டுல்லஸ். இது நடைபெற்ற ஆண்டு, 1954.
உளவு விமானம் தயாரிப்பதற்காக, வழமைபோல அமெரிக்க ராணுவத்துக்காக யுத்த தளபாடங்களைத் தயாரித்துக் கொடுக்கும் நிறுவனங்களிடம் டென்டர் கோரப்பட்டது. கிடைத்த டென்டர்களில் மிகக்குறைவாக யார் கோரியிருக்கிறார்களோ, அந்த நிறுவனத்துக்கே புராஜெக்டை கொடுப்பதுதான் நடைமுறை.
ஆனால் பிஸ்ஸல்லின் வழிமுறை வேறாக இருந்தது.
அமெரிக்க உளவுத்துறையின் உளவு பார்த்தல் வேலைகளுக்காக ஒரு விசேட உளவு விமானம் தேவை என்று சி.ஐ.ஏ. முடிவு செய்தவுடன், அந்த விமானம் எப்படியிருக்க வேண்டும் என்று சில தீர்மானங்கள் செய்யப்பட்டிருந்தன.
ரிச்சர்ட் பிஸ்ஸல்
சாதாரணமாக தரையிலிருந்து உபயோகிக்கப்படும் விமான எதிர்ப்புக் கருவிகளால் அணுக முடியாத உயரத்தில் இந்த விமானம் பறக்க வேண்டும். எந்த ராடாரிலும் சிக்காமல் இருக்க வேண்டும். அவ்வளவு உயரத்திலிருந்தும் தரையில் இருக்கும் இலக்குகளைத் துல்லியமாகப் படம் எடுக்க வேண்டும். கடும் குளிரான காலநிலைகளிலும் (ரஷ்யா!) இயங்க வேண்டும்.
இவைதான் சி.ஐ.ஏ.யின் எதிர்பார்ப்பு.
இதற்கு முன்னர் இப்படியான விமானம் ஒன்று தயாரிக்கப் பட்டதேயில்லை என்பதால், அனைத்தையும் பூச்சியத்திலிருந்தே ஒவ்வொன்றாகத் தொடங்கவேண்டி இருந்தது. விமானத்துக்கு யூ-2 என்று பெயர் மாத்திரம் சூட்டப்பட்டு, பிஸ்ஸலின் மேஜைக்கு பைல் வந்து சேர்ந்தது.
பிஸ்ஸல் இந்தத் திட்டத்தில் தன்னுடன் வேலைசெய்யத் தேர்ந்தெடுத்த நபர் கோர்டன் ஸ்டுவார்ட். அந்த நாட்களில் சி.ஐ.ஏ.யின் வெளிநாட்டு ஆபரேஷன்களுக்குப் பொறுப்பாக இருந்தவர். இந்த உளவு விமானம் வெளிநாடுகளில் உளவு பார்ப்பதற்கே அதிகம் பயன்படப் போகின்றது என்பதால் வெளிநாட்டு ஆபரேஷனில் அனுபவமுள்ள அவரைத் தேர்ந்தெடுத்திருந்தார் பிஸ்ஸல்.
ஸ்டூவர்ட்டை அழைத்துக் கொண்டு முதல்முதலாக அமெரிக்க விமானப் படையின் விமானத்தளம் ஒன்றுக்குச் சென்றார் பிஸ்ஸல். ஒரு விமானப் படைத்தளம் எப்படி இயங்குகிறது, அவர்களிடம் எந்த வகையான விமானங்கள் இருக்கின்றன என்ற விபரங்களை நேரில் பார்ப்பதற்காக! அந்த அளவுக்கு விமானம் பற்றிய அவரது அறிவு பூச்சியமாக இருந்தது.
ஸ்டுவார்ட் விமானத்தளத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, பிஸ்ஸல் அங்கிருந்த ஒவ்வொரு விமானத்துக்குள்ளும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார். அங்கிருந்த விமானிகளிடம் தொழில்நுட்ப விபரங்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டார். புரியாத விஷயங்களை மெக்கானிக்குகளை விசாரித்து தெரிந்துகொண்டார்.
“அதுவரைக்கும் விமானங்கள் பற்றிய அறிவோ அனுபவமோ அவருக்கு இல்லை என்றபோதிலும் அவர் காட்டிய ஆர்வத்தையும், சேகரித்த விபரங்களையும் பார்த்தவுடன் இந்த யூ-2 உளவு விமானத் திட்டம் சி.ஐ.ஏ.க்கு நிச்சயம் வெற்றி என்பதைப் புரிந்து கொண்டேன்” என்றார் ஸ்டுவார்ட், பின்னாட்களில் ஒரு பேட்டியில்.
விமானத்தை டிசைன் பண்ணிய மைக்கல் ஜோன்ஸன் (இடதுபுறம்)
சி.ஐ.ஏ.யிடம் உளவு விமான தயாரிப்புக்கு என்று ரிசர்வில் இருந்த பணத்தில், எந்த மேலதிகாரியின் அனுமதியுமில்லாமல் 22 மில்லியன் டொலர்வரை செலவு செய்யலாம் என்ற விசேட பிஸ்ஸல்லுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. விமானம் தயாரிக்கும் வேலைகளுக்கான டென்டர்கள் வழமை போல கோரப்பட்டன.
பிஸ்ஸலின் வேலை செய்யும் ஸ்டைல் வழமைக்கு மாறாக இருந்தது. வந்த டென்டர்களை அவர் திறந்தே பார்க்கவில்லை. அப்படியே தள்ளி வைத்துவிட்டு, ஒரு வெற்றுத் தாளை எடுத்து விமானத்தின் ஒவ்வொரு பாகத்தையும் யாரிடம் பொறுப்புக் கொடுப்பது என்று எழுதத் தொடங்கினார்.
அப்போது விமானம் டிசைன் பண்ணுவதில் பிரபலமாக இருந்த டிசைனர் மைக்கல் ஜோன்ஸன். லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் விமான டிசைனிங் பிரிவுக்கு தலைவராக இருந்தார் அவர்.
பிஸ்ஸல், அவரை அழைத்து விமானத்தை டிசைன் பண்ணும் வேலையைக் கொடுத்தார். “எவ்வளவு செலவாகின்றதோ அவ்வளவு பணத்துக்கு வவுச்சர் தயாரித்துக் கொடுங்கள். நான் பணம் சாங்ஷன் பண்ணுகின்றேன்” என்று சிம்பிளாக விஷயத்தை முடித்துக் கொண்டார்.
அடுத்ததாக அவர் தொடர்பு கொண்ட நபர் எட்வின் டான்ட். இவர் யாரென்றால், அந்த நாட்களில் உச்சத்திலிருந்த கேமரா தயாரிப்பாளர். போலரோயிட் கேமரா நிறுவனத்தில், புரடக்ஷன் பிரிவின் தலைவராக இருந்தவர். அவரிடம், விமானம் உயரத்திலிருந்து தரையிலுள்ள இலக்குக்களைப் படமெடுக்கப் போகும் கேமராக்களைத் தயாரிக்கச் சொன்னார். “பணத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஆனால், கேமரா தரமானதாக இருக்க வேண்டும்”
பிரட் அன்ட் விட்னி நிறுவனத்திடம் விமானத்தின் இன்ஜினைத் தயாரிக்கும் வேலையைக் கொடுத்தார்.
அடுத்தபடியாக, ஷெல் பெற்றோலிய நிறுவனத்தின் பிரதம இன்ஜினியர் பில் கிராபோர்ட்டை தொடர்பு கொண்டார். “எனக்கு வழமையாக விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருளைவிட, வித்தியாசமான எரிபொருள் ஒன்று தேவை” என்றார்.
“இந்த எரிபொருள் எதற்காக உபயோகிக்கப் படுகின்றது என்பது, யாருக்கும் புரியாமல் இருக்க வேண்டும். ஒருவேளை விமானம் எதிரிகளின் கைகளில் அகப்பட்டால், இந்த எரிபொருளை அவர்கள் புரிந்து கொள்ள முடியாதபடி உடனே ஆவியாகி விட வேண்டும்” என்பது அவருக்கு கொடுக்கப்பட்ட இன்ஸ்ட்ரக்ஷன்!
முதலாவது யூ-2 விமானம் பறக்கத் தயாராக..
என்னதான் உளவுத்துறையாக இருந்தாலும், சி.ஐ.ஏ. ஒரு அரசு இலாகா. எந்தவொரு காரியமும் ஆமை வேகத்தில் நடப்பது அரசு இலாகாக்களில் பிரசித்தம். அந்த நாட்களில் சி.ஐ.ஏ.யும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் பிஸ்ஸலின் யூ-2 உளவு விமானத் திட்டம் ஜெட் வேகத்தில் நடந்தது.
விமானம் முழுமையாக உருவாகியபோது, அதற்கான செலவு தலையைச் சுற்ற வைக்கப்போகின்றது என்றே சி.ஐ.ஏ.யில் பலர் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அப்படி நினைத்த ஆட்களுக்குதான் தலை சுற்றுமளவுக்கு, இறுதிச் செலவைக் காட்டினார் பிஸ்ஸல்.
யூ-2 விமானத்துக்கான மொத்த செலவும், 19 மில்லியன் டாலருக்குள் அடங்கி விட்டது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட 3 மில்லியன் டாலர் குறைவான தொகையின் விமானம் ரெடி! அப்போது, மே மாதம், 1955ம் ஆண்டு.
இனித்தான் முக்கிய சிக்கல் வருகின்றது.
விமானம் ரகசிய ஆபரேஷனுக்காக தயாரிக்கப்பட்டது அல்லவா? அதனால், அதன் செலவு முதல்கொண்டு, சகல விபரங்களும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. சி.ஐ.ஏ.யின் தலைமைச் செயலகத்துக்கு வெளியே இந்த விமானம் பற்றி எந்த ரெக்கார்ட்டும் கிடையாது. இப்படியான ரகசியத் திட்டத்தில் தயாரான விமானத்தைப் பறக்கவிட, அமெரிக்க ஜனாதிபதியின் நேரடி உத்தரவு தேவை!
அதில் நிறையவே அரசியல் பிரச்சினைகள் இருந்தன. இப்படியொரு தயாரிப்பு நடைபெறும் விஷயத்தை தமது நேச நாடுகளுக்குகூட அமெரிக்கா சொல்ல முடியாது. ஒருவேளை விமானம் மூலம் உளவு பார்க்கும் விஷயம் வெளியே தெரிய வந்துவிட்டால், பல நாடுகள் அரசியல் ரீதியாக கூச்சலிடும்.
ஏனென்றால், எந்த நாட்டிடமும் உளவு விமானங்கள் கிடையாது. விமானம் மூலம் உளவு பார்க்கலாம் என்ற விஷயமே அனைத்து நாடுகளுக்கும் புதிது!
இதனால், விமானம் தயாரிக்கப்பட்ட பின்னரும், அதைப் பறக்க அனுமதிப்பதா வேண்டாமா என்று அமெரிக்க ஜனாதிபதியால் முடிவு செய்ய முடியாமல் இருந்தது. இதுபற்றி செனட்டில் விவாதிக்கவும் ஜனாதிபதி விரும்பவில்லை.
ஒருவழியாக ஜுலை மாதம் 2ம் தேதி, 1955ம் ஆண்டு, யூ-2 உளவு விமானம் 10 நாட்கள் மாத்திரம் பறப்பதற்கான அனுமதி அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து கிடைத்தது.
சி.ஐ.ஏ.யின் தலைவர் அலன் டுல்லஸ், ஜனாதிபதியின் உத்தரவை கையில் கொண்டு வந்து பிஸ்ஸலிடம் கொடுத்துவிட்டுக் கேட்டார். “விமானம் முதல் முதலில் எங்கே பறக்கப்போகிறது?”
“வேறு எங்கே - ரஷ்யாவுக்கு மேலாகத்தான். என்ன நடக்கப்போகின்றது என்பதை இருந்து பாருங்கள்” என்றார், ரிச்சர்ட் பிஸ்ஸல்.
( தொடரும்)