கூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப்ஸைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு போன்களில் அழைப்புகளைப் பதிவு செய்ய முடியாது. கூகுள் நிறுவனம் எடுத்துள்ள இந்த கொள்கை முடிவு மே 11 ஆம் தேதியான இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த விதிமுறைகளின்படி, மூன்றாம் தரப்பு அழைப்பு செயலிகளான ரெக்கார்டிங் செயலி மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் அழைப்பை பதிவு செய்ய முடியாது.
Google Play store-ல் இருக்கும் அனைத்து மூன்றாம் தரப்பு (Third Party) கால் ரெக்கார்டிங் ஆப்களுக்கும் தடை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது கூகுள். பயனர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்கனவே பயனர்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள இந்த செயலிகள், மே 11 முதல் இயங்காது.
மூன்றாம் தரப்பினர் அளிக்கும் இந்த கால் ரெக்கார்டிங்க் சேவைகள், நாம் பேசும் போன் கால்களை பதிவு செய்யும் அதே வேளையில், நம் போனில் உள்ள API தரவுகளை இவை ட்ராக் செய்யும். இதனால் பயனர்களின் ப்ரைவசி கேள்விக்குறியாவதாகவும், பலர் இந்த செயலிகளை தவறான செயல்களுக்காக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில், கூகுள் இந்த நடவடிக்கையை மேற்க்கொண்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக கால் ரெக்கார்டிங் செயலி நிறுத்தப்படுவதாக கூகுள் கூறுகிறது. கால் ரெக்கார்டிங் ஆப் பல டெவலப்பர்கள் நியாயமற்ற முறையில் பல அனுமதிகளைப் பெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. அவை தனிநபர் பாதுகாப்புகளுக்கும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. மேலும், இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. கால் ரெக்கார்டிங் ஆப் தொடர்பான சட்டம் நாட்டுக்கு நாடு மாறுபடும்.
பயனர்களின் அனுமதியை பெற்ற பின்னரே API தரவுகளை ட்ராக் செய்வதாக கூறும் மூன்றாம் தரப்பு ஆப் நிறுவனங்கள், இனி இந்த தடையால், தங்கள் சேவைகளை வாடிக்கையாளர்களுக்குத் தர இயலாது என்று தெரிவிக்கின்றன.
கூகுள் பிளே ஸ்டோரில் இந்த ஆப்களுக்கு தடா போட்டாலும், சாம்சங், ஷவ்மி போன்ற நிறுவனங்கள் தங்கள் நிறுவன மொபைல் போன்களுக்கு in-built ஆக கால் ரெக்கார்டிங் ஆப்களை முன்னரே வைத்துள்ளது. இந்த பிராண்டு செல் போன்களை பயன்படுத்துபவர்களுக்கு தங்கு தடையின்றி செயலிகள் இயங்கும்.